நாமக்கல்லில் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு

Update: 2023-04-15 18:45 GMT

நாமக்கல்:

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டம்

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி மீது குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி ரெயில் நிலையம் முன்பு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தள்ளுமுள்ளு

கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமையில் ரெயில் மறியல் போராட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் ரெயில் நிலையத்திற்கு வெளியில் தடுத்து நிறுத்தினர். அவர்கள் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தடையை மீறி ரெயில் மறியலுக்கு செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் வீரப்பன், சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, வட்டார தலைவர்கள் தங்கராஜ், ஜெகன்நாதன், சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கன்னியம்மாள், ராம்குமார், மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் பாலாஜி மற்றும் பேரூர் செயலாளர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்