கொடைரோடு சுங்கச்சாவடி முன்பு லாரி, வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கொடைரோடு சுங்கச்சாவடி முன்பு லாரி, வேன் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நான்கு வழிச்சாலை, நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் லாரி, வேன், கார் உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில், மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி முன்பு நேற்று காலை லாரி, வேன், கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் எல்லப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தனசீலன், பொருளாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலா கார் ஓட்டுனர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், சுற்றுலா வேன் நலச்சங்க தலைவர் பாலசரவணன் மற்றும் லாரி உரிமையாளர்கள், கார், வேன் டிரைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுங்கச்சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.