நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-29 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையம் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி, உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களை போன்று மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரேமா, பொருளாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் ஜெயக்கொடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மன உளைச்சல்

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். செயலாளர் அம்பிகா, பொருளாளர் மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு உடனடியாக பணப்பயன்களை வழங்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதலாக மையங்களை ஒதுக்குவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் கூடுதல் மையங்கள் ஒதுக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மோகனூர், எருமப்பட்டி

மோகனூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மோகனூர் ஒன்றிய செயலாளர் பாலாமணி தலைமை தாங்கினார். செயலாளர் குர்ஷித்பேகம், பொருளாளர் வனிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சர்க்கரை ஆலை சி.ஐ.டி.யு, செயலாளர் வெங்கடாசலம் பேசினார். இதில் மோகனூர் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி பழனி நகரில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சரஸ்வதி, பொருளாளர் வசந்தா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

திருச்செங்கோடு

இதேபோல் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாண்டிமா தேவி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ஜமுனா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாலர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ், சி.ஐ.டி.யு. தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் நித்திய கல்யாணி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்