நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-17 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கி பேசினார். பொதுச் செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் கோபிநாத் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.60-ம், எருமை பாலுக்கு ரூ.70-ம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி மற்றும் பரளி பகுதிகளை உள்ளடக்கி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்