தர்மபுரி:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தனி துறையை அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.