100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-21 18:45 GMT

தர்மபுரி:

100 நாள் வேலை திட்டத்தில் உத்தரவாதத்துடன் பணி வழங்கக்கோரி தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

100 நாள் வேலை திட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை உத்தரவாதம் செய்திடக்கோரி தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

வேலை வேண்டி விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கு வேலைக்கான உத்தரவாதம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதான வேலையும், அதற்கான கூலி ரூ.281 வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மட்டும் வழங்க வேண்டும். 4 மணி நேரத்துக்குள் போட்டோ எடுத்தல் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் வேலை வழங்குவது தொடர்பாக உள்ள குறைகளை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி வட்ட குழு சங்கத்தின் சார்பில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ராமசாமி, சரஸ்வதி, ரவிச்சந்திரன், லட்சுமணன், குட்டி நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, வட்ட செயலாளர் சுசீலா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் செல்வம், முத்தா கவுண்டர், அண்ணாமலை, சீனிவாசன், மாதப்பன், பத்மா, முருகேசன், செல்வகுமார், நவாப்ஜான், மாது உள்ளிட்ட ஏளமான மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க வட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் துளசி தலைமை தாங்கினார். மாநில தலைவர் வில்சன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட தலைவர் கரூரான் மற்றும் நிர்வாகிகள் மாதம்மாள், தமிழ்செல்வி, வெங்கடாசலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்