சாலை வசதி கேட்டு ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சாலை வசதி கேட்டு ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-01-02 20:30 GMT

செம்பட்டி அருகே அக்கரைப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். அக்கரைப்பட்டியில் இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி இல்லை.

இதனால் மண்பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ஒன்றிய நிதியில் இருந்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த 2 தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைக்கக்கூடாது என கூறி சாலை பணியை தடுத்து நிறுத்திவிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், சாலை பணியை நிறைவேற்றக்கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் துணை தாசில்தார் ஜமுனா, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்