தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இறப்புக்கு காரணமான, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலர்களுக்கு பணி நிர்பந்தம் அதிகம் கொடுக்க கூடாது. காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் சந்திரன், மனோகரன், பாரதி செல்வம், சூர்யகுமார், ஆனந்தி, நூர்ஜான், பாரூக்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க வட்டார தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சர்வோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்குமரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.