பென்னாகரம்:
பழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பென்னாகரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ந.நஞ்சப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம், மாநில குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கோபால், காதர், முனியப்பன், புல்லாறு, வக்கீல் மாதையன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளியேற்றக்கூடாது
ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற கூடாது. பழங்குடிகள் வாழாத வனப்பகுதிகளில் சரணாலயம் அமைத்திட வேண்டும். சரணாலயம் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வனங்களிலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்ற கூடாது. பழங்குடி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள ஊர்களை வருவாய் கிராமங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பழங்குடியினர் நிலங்களை மீட்டுத்தர வேண்டும்.
பழங்குடியினர் அனைவருக்கும் வீடு கட்டித்தர வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் 5 ஏக்கர் சாகுபடி நிலம் வழங்க வேண்டும். பழங்குடியினருக்கு தனியாக பல்கலைக்கழகம், கல்வி நிலையங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பழங்குடியினர் திரளாக கலந்து கொண்டனர்.