தர்மபுரியில் அரசு ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-11-21 18:45 GMT

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர்‌ மணிவண்ணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முருகன்‌, மாவட்ட நிர்வாகி சிவராமன், மக்கள் அதிகாரம் மாநில பொதுச்செயலாளர் முத்துகுமார், மாநில செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முறையான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாளில் வழங்கப்படும் ரூ.281 ஊதியத்தை ரூ.606 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். மருத்துவ கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும். ஊழியர்களுக்கு ஓய்வறை ஏற்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் வகைப்படுத்தி உள்ளபடி அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அளவுக்கு ஏற்ப தொழிலாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்