தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட அனைத்து தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மாநகராட்சிகளில் ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்களை நியமிப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நெட்டுத்தெரு முனிசிபல் காலனி, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, பி.வி.தாஸ் காலனி ஆகிய பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் பணியின் போது இறந்தவர்கள், ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்களுக்கு உரிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.