மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்-மாவட்டத்தில் 23 இடங்களில் நடந்தது

Update: 2022-11-15 18:45 GMT

தர்மபுரி:

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தர்மபுரி மாவட்டத்தில் 23 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இந்த உயர்வை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் நேற்று பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 23 இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தர்மபுரி நகர பா.ஜ.க. சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜிம் சக்திவேல் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சோபன், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா ராஜசேகர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட தலைவர் குமார், பட்டியல் அணி மாவட்ட தலைவர் களிறு கண்ணன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் செபாஸ்டியன், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பாலக்கோடு

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு நகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு நகர தலைவர் வேலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் வெங்கட்ராஜ் கலந்து கொண்டார்.

பட்டியலின மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மவுனகுரு, கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் பசுபதி, ஒன்றிய துனைத் தலைவர் ராமசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் முருகன், மண்டல விவசாய அணி தலைவர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம், சொத்து வரி மற்றும் ஆவின் பால் உயர்வை குறைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாப்பாரப்பட்டி

பாப்பாரப்பட்டி பஸ் நிலையத்தில் பென்னாகரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பென்னாகரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சிவசக்தி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர்கள் சிவா, வெங்கடேஷ்குமார், முருகன், பொருளாளர் பச்சையப்பன், செயலாளர்கள் மணி, ராஜலிங்கம், மகளிர் அணி நிர்வாகிகள் சரண்யா, சத்யா, வேடியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பென்னாகரம்

பென்னாகரம் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இளங்குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ரவி வரவேற்றார். ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் காவேரிவர்மன், மாநில பொது குழு உறுப்பினர் ரமேஸ்வர்மா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் பா.ஜனதாவினர் திரளாக கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொது செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

கடத்தூர், பொம்மிடி

கடத்தூரில் பா.ஜனதா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் அழகு, மாவட்ட துணை தலைவர் சிவன், மாவட்ட செயலாளர் சரிதா, பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகி ஞானசேகரன், நிர்வாகி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் நிர்வாகி ரவீந்திரகுமார் நன்றி கூறினார்.

பொம்மிடி பஸ் நிலையம் அருகே பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் புஷ்பராஜ், மண்டல தலைவர் பிரவீன் ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மொரப்பூர், நல்லம்பள்ளி

மொரப்பூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் கம்பைநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் அழகு, விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொது செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முடிவில் ஒன்றிய மகளிரணி தலைவி புவனா சக்திவேல் நன்றி கூறினார்.

நல்லம்பள்ளி பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தர்மபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில நிர்வாகி ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் மாவட்ட துணை தலைவர் சிவசக்தி, மற்றும் சக்திவேல், ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்