தர்மபுரி, நல்லம்பள்ளியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-10 18:45 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி, நல்லம்பள்ளியில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பச்சாகவுண்டர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன், மாவட்ட தலைவர் மாதையன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்பதை, காலை 9 மணியாக மாற்றி, வேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்பு பட்டா மனை வழங்க வேண்டும். 60 வயதை கடந்த ஆண், பெண் விவசாய தொழிலாளர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகேசன், மாதையன், மலையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்