நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல்:
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. நாமக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், விவசாய அணி மாவட்ட தலைவர் நடராஜன், நாமக்கல் நகர தலைவர் சரவணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
இதில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
மின்சார கட்டணம் உயர்வு
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மின் கட்டண உயர்வால் யாருக்கும் பாதிப்பு இல்லை என நிருபர்களிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால் 12 சதவீதம் முதல் 51 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி, கட்டுமான பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை சட்டசபையில் விவாதிக்காமல் திடீரென தமிழக அரசு ஏற்றி உள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் மீதும், மத்திய அரசு மீதும் பழி சுமத்திவிட்டு, இவற்றை தமிழக அரசு செய்து வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கான உதாரணமாகும். கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை பணியிட மாறுதல் செய்திருப்பதன் மூலம், கலெக்டர் சரியான முறையில் இந்த விஷயத்தை கையாளாகாமல் விட்டதால் வன்முறை நடந்திருக்கிறது என்பதை அரசு ஒத்து கொண்டுள்ளது.
இவ்வாறு வி.பி.துரைசாமி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சத்யபானு, சேதுராமன், நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிலம்பரசன், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் திவ்யா, துணைத் தலைவர் உஷாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.