மாணவர்கள் முற்றுகை போராட்டம் எதிரொலி: பாண்டமங்கலம் அரசு பள்ளியில் கணினி பாடப்பிரிவு தொடக்கம்

மாணவர்கள் முற்றுகை போராட்டம் எதிரொலி: பாண்டமங்கலம் அரசு பள்ளியில் கணினி பாடப்பிரிவு தொடக்கம்

Update: 2022-06-24 18:54 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 430 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். ஆனால் தலைமை ஆசிரியர் தங்கவேல் மாற்று பாடப்பிரிவில் சேருமாறும், இல்லையென்றால் அருகே உள்ள பள்ளிகளில் சேர்ந்து கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

பாண்டமங்கலத்தில் இருந்து தொலைவில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் இப்பள்ளியிலேயே கணினி அறிவியல் பாடப்பிரிவை தொடங்ககோரி நேற்று முன்தினம் மாணவர்கள் பள்ளி நுழைவுவாயில் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்று தங்களது பெற்றோர்களுடன் பள்ளியின் முன்பு திரண்டனர். பின்னர் பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமை ஆசிரியர் தங்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கணினி அறிவியல் பாடப்பிரிவை தொடங்க தலைமை ஆசிரியர் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளியில் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. மாணவர்கள் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுத்த பேரூராட்சி தலைவர் சோமசேகர், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோருக்கு மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்