அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.40½ லட்சத்தில் பாதுகாப்பு உபகரணங்கள்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,566 கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.40½ லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை நலவாரிய தலைவர் பொன்குமார் வழங்கினர்

Update: 2023-02-08 18:45 GMT

கள்ளக்குறிச்சி

நலத்திட்ட உதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 2 ஆயிரத்து 566 தொழிலாளர்களுக்கு ரூ.40 லட்சத்து 63 ஆயிரத்து 589 மதிப்பிலான பாதுகாப்பு பெல்ட், தலைக்கவசம், முககவசம், கையுறைகள், காலுறைகள், ஒளிரும் பாதுகாப்பு உடைகள், ரப்பர் கையுறைகள், மின்சாதன பாதுகாப்பு கையுறைகள், வெல்டிங் முககவசங்கள் ஆகிய பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

9 லட்சம் தொழிலாளர்கள்

தமிழக முதல்-அமைச்சர் பெறுப்பேற்ற பின் 9 லட்சம் தொழிலாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினராக புதிதாக பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்களை காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுவருகிறது. மேலும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு நலவாரியத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் இருமடங்காக உயர்த்தியுள்ளார். விரைவில் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான தொழிலாளாகள் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

95,061 உறுப்பினா்கள்

முன்னதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசும்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 ஆயிரத்து 949 பேர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் மொத்தம் 95 ஆயிரத்து 61 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பதிவை புதுப்பித்து பதிவு நடப்பில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிப்பதற்கு உதவித்தொகை, திருமணம், மகப்பேறு, மூக்கு கண்ணாடி, உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, தொழிலாளர்கள் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்தன், தொழிலாளர் நல ஆய்வாளர்கள் கருணாநிதி, சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்