சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-09-24 18:45 GMT

கோவை

கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதா அலுவலகம், வாகனங்களை குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசி வருகின்றனர். இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி வழியாக தலைமை செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 7 சம்பவங்களில் பொதுமக்களின் உயிருக்கோ, உடமைக்கோ பெரிய பாதிப்பு இல்லை. எனவே கோவையில் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை நிலவவில்லை. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பினரையும் அழைத்து மத நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆகவே அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

தகவல் தெரிவிக்க குழு அமைப்பு

மாநகர் அல்லது புறநகர் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்க பொதுமக்கள், அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில சமூக வலைத்தளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதுபோன்று எந்தவொரு குண்டுவெடிப்பு சம்பவங்களும் கோவையில் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கோவை மாநகரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு சில சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் ஓரளவு அடையாளம் காணப்பட்டு உள்ளனர். கோவை சம்பவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் அல்லது இரு மதத்தினர் இடையே பிரச்சினை ஏற்படும் வகையில் தகவல்களை பரப்பினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைதியை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்