கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த தடை - போலீஸ் கமிஷனர்

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

Update: 2023-02-22 19:31 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இலங்கை அகதி ஜாய் (வயது 35) என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் எதிரொலியாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

கலெக்டர் அலுவலக வாசலின் இருபுறமும் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னரும், மனு அளிக்க வரும் பொதுமக்கள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மனு கொடுக்க வருகிறவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்லி மனு கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். கூட்டமாக வந்தால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இதை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா தலைமையில் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பிரதீப் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்