புதன்கிழமையுடன் தடைக்காலம் முடிந்தது:மீன்பிடிக்க தயாரான விசைப்படகு மீனவர்கள்
தூத்துக்குடியில் புதன்கிழமையுடன் தடைக்காலம் முடிந்தததால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தயாராகி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுடன் தடைக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கடலுக்குள் செல்கின்றனர்.
தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த 61 நாட்களிலும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
இன்று
மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று (வியாழக்கிழமை) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இதனால் நேற்று விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல், படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் மீன்களின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.