மனோ கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேரன்மாதேவி, திசையன்விளை மனோ கல்லூரிகளில் பேராசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-12 20:38 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி- திசையன்விளை மனோ கல்லூரிகளில் பேராசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மனோ கல்லூரி பேராசிரியர்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் திசையன்விளை, பணகுடி, நாகம்பட்டி, கோவிந்தபேரி, சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி ஆகிய 6 ஊர்களில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் கடந்த 22 வருடங்களாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனர். பேராசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகின்றது.

சேரன்மாதேவி கோவிந்தபேரியில் இயங்கி வரும் மனோ கல்லூரியில் 8 இளங்கலை படிப்புகளும், 3 முதுகலை படிப்புகளும் உள்ளன. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 60 பேராசிரியர்கள் தற்காலிகமாக பணி செய்து வருகின்றனர்.

மேற்கண்ட 6 கல்லூரிகளில் பணி செய்து வரும் தற்காலிக பேராசிரியர்கள் அனைவரும் ஜூன் 1-ந் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

உள்ளிருப்பு போராட்டம்

இதையடுத்து மனோ கல்லூரி முதல்வர் அலுவலகத்துக்குள் பேராசிரியர்கள் 56 பேர் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அலுவலகத்துக்குள் இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி இயக்குனர் வெளியப்பன், கல்லூரி முதல்வர் பூவலிங்கம் ஆகியோரை முற்றுகையிட்டனர்.

பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த ஆணையை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் திசையன்விளை மனோ கல்லூரியிலும் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்