ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-06-23 00:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பணித்திறன் பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களின் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்தில் நடைபெற்றது. 11, 12-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் அஜிசுல் ரகுமான், பிரதீப் ஆகியோர் அளித்தனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போதைய காலக்கட்டத்தில் மாணவர்கள் பல்வேறு மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தற்கொலைகள், போதை பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட தவறான பாதையில் செல்கின்றனர். மேலும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாகவும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுபோன்ற மன அழுத்தம் உள்ள மாணவர்களை கண்டறிய வேண்டும். அந்த மாணவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.

ஆரம்ப நிலை கண்டறிதல்

எனவே உடல் நலம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த மாணவர்களிடம் உள்ள நிலைகள் குறித்து அறிதல், ஆரம்ப நிலையை கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு, முன் கழுத்துக்கழலை நோய், காசநோய், ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும், வளர்இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், தன் சுத்தம், சுகாதாரம் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும். இதில் பயிற்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய அளவில் வருகிற 24-ந்தேதி பிற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த பயிற்சியில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, மதுக்கரை ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 31 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த பயிற்சிற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கு வட்டார ஆசிரியர் பயிற்றுனர் (பொறுப்பு) ஸ்வப்னா செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்