சப்-கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று வருகிற 24-ந்தேதி சப்-கலெக்டரிடம் மனு கொடுப்பது என்று கைத்தறி நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொள்ளாச்சி
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று வருகிற 24-ந்தேதி சப்-கலெக்டரிடம் மனு கொடுப்பது என்று கைத்தறி நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி, நெகமம் பகுதிகளில் கைத்தறி நெசவு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் நூல் விலை உயர்வு, கைத்தறி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே கடந்த 5-ந்தேதி கைத்தறி நெசவாளர்கள் தபால் மூலம் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையத்தில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகை கோவிலில் நேற்று கைத்தறி நெசவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், அதை தீர்க்க அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வது குறித்தும் பேசினார்கள். இதில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும்
கூட்டத்தில் கைத்தறி தொழிலுக்கு ஒதுக்கப்பட்ட 11 ரக துணிகள் கைத்தறி மூலமே கண்டிப்பாக உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும். கைத்தறி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். பட்டு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி ஒரே சீராக இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவது, தேக்கமடைந்த கைத்தறி துணிகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி துணிகளை அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாரம் ஒரு முறையாவது பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, கைத்தறி நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கிகளை ஏற்படுத்துவது, கைத்தறி சங்கங்கள் மூலமாக பட்டு சேலை மற்றும் நூல் சேலைகளை உற்பத்தி செய்வதற்கு உரிய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வலியுறுத்துவது மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி மனு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.