குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
வந்தவாசி, வேட்டவலம், ஆரணியில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி, வேட்டவலம், ஆரணியில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கு (உயிர்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவக்காலமான சாம்பல் புதன் கடந்த பிப்ரவரி மாதம் திருப்பலியுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர், ஒரு கோவேறு கழுதை குட்டியின் மீது அமர வைத்து ஜெருசலேம் நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
அப்போது மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, "ஓசன்னா! தாவீதின் குமாரா, ஓசன்னா, ஓசன்னா... ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை 'குருத்து ஞாயிறு' ஆக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று 'குருத்து ஞாயிறு' விழா நடந்தது.
ஊர்வலம்
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வந்தவாசி கோட்டை காலனி பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் ஆரணி சாலை, பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை வழியாக தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசன்னா.. பாடலை பாடியபடி சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஆலயத்தில் பங்குத்தந்தை டி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
வேட்டவலம்
வேட்டவலத்தில் சின்ன கடை தெருவில் இருந்து பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை வேளாங்கண்ணி தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக ஓசன்னா பாடல் பாடியபடி புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து கூட்டுத்திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியசாமி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆவூர், ஜமீன்கூடலூர், நா.கெங்கப்பட்டு, சாணிப்பூண்டி, மதுராம்பட்டு ஆகிய பகுதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.
ஆரணி
ஆரணி சூரியகுளம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கெத்செமனே கிறிஸ்தவ ஆலயம், கார்த்திகேயன் சாலையில் உள்ள புனித தூய காணிக்கை அன்னை தேவாலயம், பழைய ஆற்காடு சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயங்களின் சார்பாக கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஆரணி நகராட்சி சாலையில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் அந்தந்த தேவாலயங்களுக்கு சென்று நிறைவு செய்தனர்.
நிகழ்ச்சியில் பங்கு தந்தை ராய்லாசர், ஆயர் ஆபிரகாம் ஆசைதம்பி ஆகியோர் சிறப்பு திருப்பலி செய்தனர்.