பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் - ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-10 15:34 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கி வரும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது... இந்த மனு விசாரணைக்கு வந்த போது சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப் பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சில விவரங்களை கோரி உள்ளதால் அவை விரைவில் வழங்கப்பட்டு தேர்வு நடவடிக்கைகள் துவங்கப்படும் என்றும், இடைப்பட்ட காலத்தில் தற்காலிகமாக 36 ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது போன்ற விஷயங்களில் அரசு அவசரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், 1 வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிய விவரங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். தேர்வு குறித்த நடவடிக்கைகளை தேர்வு வாரியம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதால் இடைப்பட்ட காலத்தில் 36 ஆசிரியர்களை நியமிக்கலாம் எனவும் அனுமதித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்