கருக்கலைப்பு செய்தால் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண், பெண் சதவீதம் மாறுபட்டு வருவதாகவும், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-08-15 19:15 GMT

கிராமசபை கூட்டம்

ஜோலார்பேட்டை அருகே மேல்அச்சமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஜோலார்பேட்டையை அடுத்த மேல் அச்சமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, சுகாதார துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற அனைத்து பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், எரிப்பதையும் தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் பெண்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கிறது. இதற்கு காரணம் கேழ்வரகு களி, கூழ் போன்ற உணவுப் பழக்கத்தை நாம் மறந்து விட்டோம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் இயற்கை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் ஆண், பெண் சதவீதம் மாறுபட்டு வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் ரகசியமாக கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். கருக்கலைப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்று நட்டார்

கூட்டத்தில் மேல்அச்சமங்கலம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதால் பஸ் வசதி, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்றுகள் நட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்