சொத்துவரி நோட்டீசை விரைவு தபாலில் அனுப்ப நடவடிக்கை
வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி நோட்டீசை விரைவு தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி நோட்டீசை விரைவு தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொத்துவரி உயர்வு
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்களில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சொத்துவரி தொடர்பான சீராய்வு பணிகள் அந்தந்த உள்ளாட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி வீட்டுமனைப்பிரிவுகளில் 600 சதுர அடிக்குள் 25 சதவீதமும், 601 முதல் 1,200 சதுர அடிக்குள் 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடிக்கு மேல் இருந்தால் 100 சதவீதமும், வணிகப்பிரிவு அனைத்து கட்டிடங்களுக்கும் 100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டது.
மேலும் அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டு சொத்துவரி உயர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வீடுகள்தோறும் உள்ளாட்சி அமைப்பினர் சென்று உயர்த்தப்பட்ட சொத்துவரி எவ்வளவு என்பதற்கான விளக்க நோட்டீஸ் வழங்கினர்.
விரைவு தபால்
வீடுகளுக்கு இந்த நோட்டீஸ் வழங்குவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் செல்லும்போது சில வீடுகள் பூட்டிக்கிடந்தன. சிலர் பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்றிருந்தனர். அவர்களிடம் சொத்துவரி உயர்வு தொடர்பான நோட்டீஸ் வழங்க முடியவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு புகார்கள் சென்றது.
இதைத்தொடர்ந்து சொத்துவரி விளக்க நோட்டீஸ் வழங்காத வீடுகளுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் அனுப்பும் நோட்டீஸ் கண்டிப்பாக போய் சேரும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி நோட்டீஸ் வழங்காத வீடுகளுக்கு விரைவு தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.