புதிய நிபந்தனையால் மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதில் சிக்கல்

மலேசியா அரசின் புதிய நிபந்தனையால், 40 நாட்களுக்கு மேலாக அந்நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-02-16 18:45 GMT

முட்டை ஏற்றுமதி

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

அதேபோல் துருக்கி நிலநடுக்கம் எதிரொலியாக அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதனிடையே மலேசியாவில் முட்டைகளை இறக்குமதி செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவிற்கு ஏற்றுமதியாகும் முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிகளுக்கு பவுல் காலரா, சால்மனலா பாக்டீரியா மற்றும் என்.டி. வைரஸ் நோய் உள்ளிட்ட 3 நோய்களின் பாதிப்பு உள்ளதா? என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாகி உள்ளது. அந்த பரிசோதனையை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் காலதாமதம் ஏற்படுகிறது.

மலேசியாவுக்கு அனுப்புவதில் சிக்கல்

சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் நடைமுறை சிக்கலால் 40 நாட்களுக்கு மேலாக மலேசியாவிற்கு முட்டையை ஏற்றுமதி செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க முட்டை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல்லிலேயே அத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சான்றிதழ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க நாமக்கல்லில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் சார்பில் நடந்த அந்த கூட்டத்தில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், ஆய்வக பரிசோதனை நிபுணர்கள் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இதுகுறித்து முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் கூறியதாவது:-

மலேசியா அரசு முட்டைகளை இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. முட்டைகளை உற்பத்தி செய்யும் கோழிகளுக்கு பவுல் காலரா, சால்மனலா பாக்டீரியா மற்றும் என்.டி. வைரஸ் நோய் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்த பரிசோதனைச் சான்றிதழை கட்டாயமாக்கி உள்ளது. அந்த சான்றிதழை பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் தான் பரிசோதனை செய்து பெற முடியும். அதனால் காலதாமதம் ஏற்படுகிறது.

பரிசோதனை

அதன் எதிரொலியாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தடைப்பட்டு உள்ளது. இதை தவிர்க்க நாமக்கல்லில் அந்த பரிசோதனையை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மலேசியா மட்டுமின்றி இலங்கை, இந்தோனேசியா போன்ற பிற நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதியாகும். துருக்கி நிலநடுக்கம் காரணமாக மாலத்தீவு, கத்தார், துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்