கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொம்மைகள் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி சார்பில் என் குப்பை என் பொறுப்பு பணிகள் தொடர்பாக கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கலைநயமிக்க பொம்மைகள் கண்காட்சி போட்டி கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்றது.
இதில் 1,600 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 74 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் சிவமுருகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.