பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தூத்துக்குடி மாவட்டத்தில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 380 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பேச்சு போட்டி
கூட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி முதுநிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி பே.சுபதர்சினி முதல் பரிசும், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ச.அர்ச்சனா 2-வது பரிசும், திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஜ.துர்காலட்சுமி 3-வது பரிசும் பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு சிறப்புப் பரிசுக்கு திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி பே.சு.பரமேசுவரி மற்றும் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் கி.விக்னேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா முதல் பரிசும், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவன் ச. அருண்குமார் 2-வது பரிசும், தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி மாணவி அஸ்வர்னிஹா 3-வது பரிசும் பெற்றனர்.
இதே போன்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவி அ.பிரின்சி முதல் பரிசும், கீழஈரால் தென் போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி மாணவன் ம.அந்தோணி ஜேம்ஸ் 2-வது பரிசும், தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவி ப.ஷீரின் 3-வது பரிசும் பெற்றனர்.
பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசுரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசுத் தொகை 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.