காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தேர்தல் விழிப்புணர்வு போட்டி
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மற்றும் திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் வழிகாட்டுதலின்படி மாவட்ட தேர்தல் கல்வி குழு சார்பில் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் பாராளுமன்ற, சட்டமன்ற, நகர்புற, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஜனநாயக முறைப்படி வாக்களிக்கும் வழிமுறைகள், வாக்களிப்பதன் அவசியம் வாக்குச்சீட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் வழிமுறைகள் ஆகியவைகள் பற்றிய தேர்தல் விழிப்புணர்வு போட்டி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எனது வாக்கு எனது உரிமை, ஒரு வாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு சுவரொட்டி உருவாக்குதல், சுவர் இதழ் உருவாக்குதல், கதை, கட்டுரை, கவிதை எழுதுதல், ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.
பாராட்டு
மாவட்ட தேர்தல் கல்வி குழு சார்பில் வாக்களிப்பது அவசியம், வாக்களிப்பது நமது உரிமை, நமது கடமை, ஜனநாயக நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிப்போம், பணத்திற்காக வாக்கை விற்க மாட்டோம் என்ற தலைப்பில் சிறந்த முறையில் ஓவியம் வரைந்த 3 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். விழாவில் காங்கயம் தாசில்தார் எஸ்.புவனேஸ்வரி, தேர்தல் துணை தாசில்தார் கே.ராதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெற்ற மாணவிகள் பி.உமா, எஸ்.அனு, எஸ்.சாரதி பிரியா ஆகியோர்களுக்கு ரொக்க பரிசு தொகை, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த போட்டி மற்றும் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி.செந்தில்குமார் செய்திருந்தார்.