விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
விழுப்புரம் அருகே உள்ள டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார் (வயது 27). இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2002-ல் 6 வயது சிறுவனாக இருக்கும்போது தனது உறவினர் ஒருவருடன் அதே கிராமத்தில் சாலையோரமாக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த மினி லாரி, அருண்குமார் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அருண்குமாரின் தந்தை முருகன், இழப்பீடு கேட்டு விழுப்புரம் சிறப்பு சார்பு நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர், இன்சூரன்ஸ் பதிவு செய்த விழுப்புரத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு இழப்பீடாக ரூ.82 ஆயிரத்தை வழங்க வேண்டுமென கடந்த 2022-ல் தீர்ப்பு கூறியது.
இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
ஆனால் இழப்பீட்டு தொகையை வழங்க காலதாமதம் செய்ததால் மனுதாரர் சார்பில் வக்கீல் சங்கர், நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 846-ஐ பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்காதபட்சத்தில் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று கோர்ட்டு உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் தமிழ்வேந்தன், பாக்யராஜ் ஆகியோர் அந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள கணினிகள், பிரிண்டர், இரும்பு அலமாரிகள், குளிர்சாதன பெட்டிகள், மர மேஜைகள், மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.