தனியார் நிறுவன ஊழியர் பலி
தனியார் நிறுவன ஊழியர் டிப்பர் லாரி மோதி பலியானார்.
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் தெற்கு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஜெகதீசன் (வயது 30). இவர், ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வுக்கு படித்து வந்தார். நேற்று மாலை தன்னுடைய சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டிக்கு சென்று விட்டு ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கீரிப்பட்டி பேரூராட்சி கீழ்கணவாய் என்ற இடத்தின் அருகில் வந்த போது மல்லியகரையில் இருந்து தம்மம்பட்டி நோக்கி சென்ற மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெகதீசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகதீசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.