தனியார் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
அய்யலூர் அருகே தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சரிவர நின்று செல்வதில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை தங்கம்மாபட்டியில் தனியார் பஸ் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த பஸ்சை மறித்து சிறை பிடித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பஸ் நிர்வாகத்தினர் தங்கம்மாபட்டியில் எப்போதும் போலவே பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து பஸ்சை பொதுமக்கள் விடுவித்தனர்.