கோவைக்கு மாற்றக்கோரி சேலம் சிறையில் கைதி உண்ணாவிரதம்-பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர், கோவைக்கு மாற்றக்கோரி சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்தார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அதே போன்று ஆசை வார்த்தையில் மயங்காத சில இளம் பெண்களை மிரட்டி கார், மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச்சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சபரிராஜன் (வயது 28), வசந்தகுமார் (28), சதீஷ் (26) உள்பட 9 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு கருதி கோவை சிறையில் 6 மாதம் அடைக்கப்பட்டு இருந்த 9 பேரும் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதி சபரிராஜன் நேற்று முன்தினம் இரவு உண்ணாவிரதம் இருப்பதாக கூறிக்கொண்டு சாப்பிட மறுத்து உள்ளார்.
நீதிபதியிடம் விளக்கம்
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று காணொலி காட்சி மூலம் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் சாப்பிடாமல் இருப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறை அதிகாரிகள் ஆஜராகும் படி கூறியதை தொடர்ந்து சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் ஆஜராகி நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தார்.
இதுகுறித்து சூப்பிரண்டு வினோத்திடம் கேட்ட போது பாதுகாப்பு கருதிதான், கைதி சபரிராஜன் கோவை சிறையில் இருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஆனாலும் அவர், மீண்டும் கோவை சிறைக்கு தன்னை மாற்றும்படி கூறியதுடன், அவர் நேற்று இரவு (அதாவது நேற்று முன்தினம்) சாப்பிட மறுத்தார். அவரிடம் சிறைக்காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சாப்பிட வைத்தனர் என்றார்.