ஆதரவற்ற விதவைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-16 18:45 GMT

தக்கலை:

ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆதரவற்ற விதவை சான்றிதழ்

பத்மநாபபுரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் தாலுகா பகுதியில் வசிக்கும் கணவனை இழந்த விதவை பெண்கள் வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை பெறுவதற்கான ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேண்டி வருவாய்துறையிடம் விண்ணப்பித்திருந்தனர். இந்த மனுக்கள் குறித்து அந்தந்த பகுதி வருவாய் அலுலர்கள் விசாரணை மேற்கொண்டு தகுதியுடையவர்களை தேர்வு செய்து அது குறித்த அறிக்கையை பத்மநாபபுரம் சப்-கலெக்டரிடம் வழங்கினர். இதனை பரிசீலித்த சப்-கலெக்டர் கவுசிக் தேர்வு செய்யப்பட்ட விதவை பெண்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று அறிக்கையின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டார். இதில் கல்குளத்தில்-3, விளவங்கோட்டில்-18, கிள்ளியூரில்-23 என மொத்தம் 44 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தக்கலையில் உள்ள சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சப் - கலெக்டர் கவுசிக் சான்றிதழ்களை வழங்கினார்.

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரீபாஜி. இம்மானுவேல் பேசுகையில் கூறியதாவது:-

ஆதரவற்ற விதவை சான்றிதழ் வேலைவாய்ப்பிற்கான ஒரு முன்னுரிமை சான்றிதழாகும். உங்களின் கல்வி தகுதி, வயது ஆகியவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பிற்கு பரிந்துரை செய்வோம். வேலைவாய்ப்புகள் குறித்து பத்திரிகையில் அறிவிப்பு கொடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்காக போட்டி தேர்வுகளை எழுத உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களையும், பழைய வினாத்தாள்களையும் வாங்கி படித்தாலே பாஸ் ஆகி விடலாம். சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற்றவர்கள், பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்கள், வேலைவாய்ப்புள்ள இடத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிப்பவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். அரசின் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தற்போது 30 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதில் ஆதரவற்ற விதவைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே சான்றிதழை வாங்கியாச்சு, வேலை நம்மை தேடிவரும் என காத்திருக்காமல் வேலைக்காக போட்டி தேர்வு போன்ற பல்வேறு முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்