'பெண்கள் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி'- வானதி சீனிவாசன்
கூட்டணி குறித்து பாஜக தலைமையே முடிவு செய்யும் என்று எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை,
கோவையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் முயற்சியால் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 33% மகளிர் இடஒதுக்கீட்டால் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வந்த சமூக கொடுமைகள் குறையும்.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டு காலமாகியும்கூட அடிப்படை வசதிகளான கழிப்பிடம், கேஸ் இணைப்பு, இருப்பதற்கான நல்ல வீடுகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் பிரதமர் மோடி.
பல்வேறு உலக நாடுகள் அமைப்புகள் கூட, இந்தியாவில் எப்படி பெண்கள் தலைமை தாங்குகின்ற மாற்றம், முன்னேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை பற்றி சிறப்பான கட்டுரைகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன. கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் தயாராக இல்லை, அதை பாஜக தலைமையே முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.