பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

பிரதமர் மோடி- மு.க ஸ்டாலின் இடையேயான சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

Update: 2024-09-27 07:40 GMT

சென்னை,

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கல்வி மற்றும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்" எனத் தெரிவித்தார். அதன்படி, நேற்று இரவு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லி சென்றார்.

இரவு டெல்லியில் தங்கிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 45 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.

3 முக்கிய கோரிக்கைகள்

பிரதமர் மோடியை சந்தித்த போது மு.க. ஸ்டாலின் வலியுறுத்திய 3 முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:

*சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

*பள்ளி கல்வித்துறைக்கான சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி விடுவிப்பது அவசியம்.

* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 5.15 மணியளவில் விமானம் மூலம், மு.க ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 



Tags:    

மேலும் செய்திகள்