முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

திருவாரூர் அருகே கலைஞர் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.பொதுமக்களடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

Update: 2023-02-21 18:45 GMT


திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பின்னர் திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா வீட்டுக்கு சென்று அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் இருந்து கார் மூலம் திருவாரூர் புறப்பட்டு சென்றார்.

சிறப்பான வரவேற்பு

திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் காரில் புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தார். காரில் இருந்து கீழே இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், வீட்டிற்குள் சென்றார்.

அங்கு ஓய்வு எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலம் காட்டூருக்கு சென்றார். அங்குள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்

இந்த நினைவிடத்திற்கு அருகாமையில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம், திருமண மண்டபத்துடன் கட்டப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள், வரலாற்று தொடர்பான அனைத்தையும் பார்வையிட்டார். அருங்காட்சியகத்தின் மேல்பகுதியில் ஆழித்தேரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் அவர் பார்வையிட்டார். பின்னர் வெளியே வந்து அங்கே கூடியிருந்த மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்றனர். முதல்-அமைச்சர் சென்ற பாதைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருமண விழாவில் பங்கேற்பு

இன்று (புதன்கிழமை) மன்னார்குடியில் நடைபெறும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அவர் மன்னார்குடியில் இருந்து காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்