'முதல்-அமைச்சர் அதிகம் பேசுவதில்லை, செயலில் காட்டுகிறார்' அமைச்சர் துரைமுருகன் புகழாரம்
‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகம் பேசுவதில்லை, செயலில் காட்டுகிறார்’ என்று அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.
ஊட்டி,
தி.மு.க.வில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று தொடங்கியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த முகாமை தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. சென்னையில் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா
தி.மு.க.வில் ஏற்கனவே ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை நிறைவேற்றி காட்டுவோம். கருணாநிதி வள்ளூவர் கோட்டத்தை கட்டினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை மிக சிறப்பாக கட்டியுள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளில் இந்த கோட்டம் திறக்கப்படும்.
தந்தை பெரியார், அண்ணா நூற்றாண்டு விழாவை பார்த்துள்ளோம். கருணாநிதி நூற்றாண்டு விழாவை காண உள்ளோம். இத்தகைய நூற்றாண்டு விழாக்களை கண்டுள்ள இயக்கம் தி.மு.க.
இந்திய அரசியல்
கருணாநிதி சாதாரண மனிதர் இல்லை. எழுத்து, பேச்சு, திரைக்கதை, அரசியல் என பன்முக திறமை கொண்டவர். அவர் பல ஜனாதிபதி மற்றும் பிரதமர்களை உருவாக்கியவர். இந்திய அரசியலை தனது சுண்டு விரலில் வைத்து நடத்தி காட்டியவர் கருணாநிதி. அவரது பாதையில் மு.க.ஸ்டாலின் பயணிக்கிறார்.
கருணாநிதி பல ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்திய அளவில் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கினார். மு.க.ஸ்டாலின், 2 ஆண்டுகளில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார். மு.க.ஸ்டாலின் அதிகம் பேசுவதில்லை. அவர் பாதி காமராஜர், செயலில் செய்து காட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரிய அதிகாரியை நேரில் வர உத்தரவிட்ட அமைச்சர் துரைமுருகன்
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் பேசி கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டு, 5 நிமிடங்களுக்கு பின்னர் மின்சாரம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய கூடுதல் என்ஜினீயரை செல்போனில் தொடர்பு கொண்டு, 3 அமைச்சர்கள் ஒரே இடத்தில் இருக்கும் நேரத்தில் மின் வினியோகம் சரி இல்லை என்று கோபமாக கூறினார். மேலும் இதுகுறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மின்வாரிய அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார்.