தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
நாகை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், பிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் கலைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணி அமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான முடிவுகளை தேசிய கல்விக் கொள்கையில் இருந்து நீக்க வேண்டும். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பதவியினை மீண்டும் உருவாக்கி தொடக்க கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.