ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை

திருக்கடையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதிய மருத்துவ ஊழியர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Update: 2022-09-30 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் மெயின்ரோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தின் மூலம் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ராவணயன் கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், சீவகசிந்தாமணி, அபிஷேக கட்டளை, பிச்சைகட்டளை, காலகட்டளை, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, குருவிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

பக்தர்கள்

மேலும், இங்கு பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளதால் தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வாறு சிறப்பாக செயல்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இதனால், மாலை நேரத்திற்கு பிறகு திடீரென உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள், கர்ப்பிணிகளை மயிலாடுதுறைக்கோ அல்லது திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கோ தான் அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கிருந்து நீண்ட தொலைவில் உள்ள அந்த பகுதிகளுக்கு செல்வதற்கு அதிக சிரமம் ஏற்படுகிறது.

ஆகவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவ ஊழியர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்