அரசு அனுமதியின்றி பணியாற்றும் பூசாரிகளை வெளியேற்ற வேண்டும்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அரசு அனுமதியின்றி பணியாற்றும் பூசாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று சங்கு ஊதியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
கோவை
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அரசு அனுமதியின்றி பணியாற்றும் பூசாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று சங்கு ஊதியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை களை மனுவாக எழுதி கொடுத்தனர்.
இதில், இந்து மக்கள் கட்சியை (தமிழகம்) சேர்ந்த செந்தில்குமார் மற்றும் உதயகிரி ஆகியோர் சங்கு ஊதியபடி, ஊமத்தம்பூ மாலை அணிந்து வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் அரசால் நியமிக்கப்பட்ட 3 பூசாரிகள் உள்ளனர்.
ஆனால் அங்கு அரசால் அனுமதிக்கப்படாத பூசாரிகள் 4 பேர் பூஜை செய்து வருகிறார்கள். அவர்களை உடனடியாக கோவிலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
தீயணைப்பு நிலையம்
ஒருதாய் மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், மதுக்கரை, தொண்டாமுத்தூர், செட்டிபாளையம், கோட்டூர், வேட்டைக்காரன்புதூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் இல்லை.
இதனால் அங்கு தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குள் சேதம் அதிகரிக்கிறது எனவே அந்த பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
கல்லறை தோட்டம்
மேட்டுப்பாளையம் தாலுகாவை சேர்ந்த அனைத்து கிறிஸ்தவ திருச்சபை போதகர்கள் ஐக்கியம் சார்பில் கொடுத்த மனுவில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் 60-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன.
இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு கிறிஸ்தவர்கள் இறந்தால் அடக்கம் செய்ய இடம் இல்லை. இதனால் அன்னூர், பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் அடக்கம் செய்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு உடனடியாக கல்லறை தோட்டம் அமைக்க இடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
திருநங்கைகள்
கோவை சின்னியம்பாளையம் மைலம்பட்டியை சேர்ந்த திருநங்கைகள் ஆட்டுக்குட்டிகளுடன் வந்து கொடுத்த மனுவில், நாங்கள் பொது இடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தோம். அதை வருவாய்த்துறையினர் அகற்றி விட்டனர். எனவே எங்களுக்கு ஆடுகள் வளர்க்க இடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.