பொங்கல் பானைகள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய பூசாரி
பொங்கல் பானைகள் மீது ஏறி நின்று பூசாரி அருள்வாக்கு கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உப்புப்பட்டி கிராமத்தில் கூரைக்கொட்டகை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவில் கானத்தான்பட்டி, முடுக்குப்பட்டி, குளத்துப்பட்டி உள்பட 7 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அய்யனாருக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். கொரோனா ஊரடங்கு மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் திருவிழா நடைபெற்றது. இதில் 7 கிராமத்தின் சார்பில் தலா 2 பானைகள் வீதம் 14 பானைகளில் பொங்கலிடப்பட்டு, அதன் மேல் பூசாரி ஒருவர் நடந்து சென்று அருள்வாக்கு கூறினார். தீயில் பொங்கலிட்ட நிலையில் மண்பானை மீது பூசாரி ஏறி சென்ற போது அவரது பக்கவாட்டில் 2 பேர் கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டனர். பானையின் மீது அவர் ஏறி 3 முறை நடந்து சென்றார். அப்போது பானைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் அனைவரும் பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.