பூமி வெப்ப மயமாதலை தடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை - டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மின்னணு வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகத்தினுடைய வெப்பநிலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மாறாமலேயே இருந்திருக்கிறது. பல நூறு கோடி ஆண்டுகள் தாக்குப்பிடித்த இந்த உலகம், கடந்த 100 முதல் 200 ஆண்டுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மாற்றங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது. பூமியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களைப் பற்றி உணராமல் இருக்கிறோம்.
துபாயில் உலக பருவநிலை உச்சிமாநாடு என்ற உலகத் தலைவர்கள் சங்கமிக்கும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. 2050-ல் இப்போது இருக்கக்கூடிய வெப்பநிலை 1.5 டிகிரி சென்டி கிரேடுக்கு மேல் உயராமல் தடுப்பதற்காக உலகத் தலைவர்களே ஒன்றுகூட வேண்டியிருக்கிறது என்றால் இதனுடைய முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தே ஆக வேண்டும்.
வீடுகளில் தேவையில்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் மின்சாரம் மற்றும் குளிர்சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து மின்னணு வாகனங்களுக்கு மாற வேண்டும். வாகனப் பயணங்களை முடிந்தளவிற்குத் தவிர்க்கலாம்.
நாம் எதை விட்டுச் செல்கிறோமோ இல்லையோ இன்றிருக்கக்கூடிய சீதோஷண நிலையை மட்டும் கெடுக்காமல் சென்றாலே, அதுவே நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு கோடிகோடி புண்ணியமாக இருக்கும். எனவே 2050-ல் வெப்பநிலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் செய்யட்டும் என்றில்லாமல், ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக நினைத்துச் செயல்படவேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.