பெருந்துறை அருகே போலீஸ் போல் நடித்து கேரள வியாபாரியிடம் ரூ.29 லட்சம் பறித்த பெண் உள்பட 5 பேர் கைது

பெருந்துறை அருகே கேரள வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.29 லட்சம் பறித்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-18 21:59 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே கேரள வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.29 லட்சம் பறித்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணம் பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பனங்காடு பகுதியை சேர்ந்தவர் அன்சாரி (வயது 57). ஜவுளி வியாபாரி. இவர் தனது நண்பர்கள் அபிலாஷ் மற்றும் பஷீர் ஆகியோருடன் ஜவுளி புரோக்கரை பார்ப்பதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள சரளை ஏரிக்கருப்பன் கோவில் எதிரில் கடந்த 14-ந் தேதி காரில் வந்து காத்திருந்தார். அப்போது மற்றொரு காரில் போலீஸ் சீருடையுடன் 2 பேரும், சாதாரண உடையில் 2 பேரும் என மொத்தம் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அன்சாரியிடம் 'உங்களிடம் கருப்பு பணம் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என கூறி அவரது காரை சோதனையிட்டனர். அப்போது காரில் அவர் வைத்திருந்த ரூ.29 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் அன்சாரியிடம், 'இந்தப்பணத்தை நாங்கள் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்கிறோம், அங்கு வந்து முறையான ஆவணங்களை காட்டி, இந்த பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுச் செல்லுங்கள்' என்று கூறி காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து அன்சாரி விசாரித்தார். அப்போது அவரிடம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் போல் நடித்து மர்மநபர்கள் பணத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

தேடுதல் வேட்டை

இதைத்தொடர்ந்து அன்சாரி இதுகுறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை விரைந்து பிடிக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கருப்பசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது அவர்கள் வந்த கார், கோவையில் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே நின்று கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு பெண் கார் அருகே நின்று கொண்டிருந்தார்.

பெண் கைது

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த பெண் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி பிரேமா என்கிற மகாலட்சுமி (48) என்பது தெரியவந்தது. மேலும் இவர், அன்சாரியிடம் பணம் பறித்துச்சென்ற 4 பேரின் கூட்டாளி என்பதும், கொள்ளையடித்த பணத்தில் ரூ.50 ஆயிரம் அவரிடம் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பிரமோ என்கிற மகாலட்சுமியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் மகாலட்சுமி கொடுத்த தகவல் அடிப்படையில் காரில் வந்து அன்சாரிடம் ரூ.29 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள புரையார் தேசத்தை சேர்ந்த பஷீர் (49), பாலக்காடு மாவட்டம் மேலர்கோடு சிட்டலிம்சேரியைச் சேர்ந்த ஜலில் (40), பாலக்காடு அருகே உள்ள கண்ணடியை சேர்ந்த சுதிர் (47), கோவை ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்த ஜனார்த்தனம் (47) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடி அருகே நிற்பதும் தெரியவந்தது.

4 பேர் சிக்கினர்

அதைத்தொடர்ந்து வாளையார் சோதனைச்சாவடிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.24 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு விபிஷி விசாரித்து 5 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி மகாலட்சுமி கோவை மத்திய சிறையிலும், மற்ற 4 பேரும் பெருந்துறை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்