தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம்- உதவி ஆணையாளர் தகவல்

தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படுவதாக உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-12-01 21:13 GMT

தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படுவதாக உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.

ஓய்வூதியம்

இதுகுறித்து ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் பணிநிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சட்டத்தினை இயற்றியது. உடல் உழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1999-ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது.தற்போது, தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் மேற்படி நலவாரியங்களில் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரண உதவி தொகை, விபத்து மரண உதவி தொகை மற்றும் மாத ஓய்வூதியம் ஆகியவற்றை பெறலாம்.

மானியம்

அரசாணை எண் 66, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதியின்படி தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 60 வயது பூர்த்தியடையாத பெண் ஓட்டுனர்கள், தங்களது நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், தங்களது புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம்


இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை ஈரோடு மாவட்டம், சென்னிமலை ரோடு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிட வளாகத்தின் கீழ் தளத்தில் இயங்கிவரும் ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பித்து இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0424-2275591, 0424-2275592 என்ற அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்