திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்
திருவள்ளூர் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆஷியா (வயது 32) இவருக்கு திருமணமாகி அப்ராஸ் (4) என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆஷியா முதல் கணவருடன் தலாக் மூலம் விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 2022-ம் ஆண்டு நூருல்லா என்பவரை ஆஷியா 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஆஷியா 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் நூருல்லாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25-ந்தேதி மாலை வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் உயிரிழந்த ஆஷியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் உயிரிழந்த ஆஷியாவின் அண்ணன் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இந்தியாஸ் (வயது 48) என்பவர் தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.