நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் விபத்தில் பலி

மணவாளக்குறிச்சி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது ே்மாட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் பரிதாபமாக இறந்தார் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

Update: 2022-10-12 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது ே்மாட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் போலீஸ் பரிதாபமாக இறந்தார் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பெண் போலீஸ்

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி உஷா(வயது 39). இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு அமலேஷ் (7) என்ற ஒரு மகன் உள்ளான். தற்போது உஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் தினமும் ஸ்கூட்டரில் பணிக்கு செல்வது வழக்கம்.

மோட்டார் சைக்கிள் மோதியது

அதே போல் நேற்று முன்தினம் காலையில் உஷா வழக்கம் போல் ஸ்கூட்டரில் பணிக்கு சென்றார். வேலை முடிந்து இரவு 7 மணி அளவில் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கட்டைக்காடு பகுதியில் ஸ்கூட்டர் வந்த போது, முட்டம் ஆரோக்கிய மாதாதெருவைச் சேர்ந்த தாமஸ் என்பவரது மகன் அபிஷேக் பெக்கெட் என்ற சஞ்சய் (19) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

குழந்தையும் இறந்தது

இந்த விபத்தில் உஷா தூக்கி வீசப்பட்டு, சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதே சமயம் தகவல் அறிந்து உஷாவின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் உஷாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் உஷா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. அவர் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் உஷாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

உஷாவின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உஷாவின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மீனவர் மீது வழக்கு

இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீனவர் ஆவார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிறைமாத கர்ப்பிணியான உஷா இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீஸ் உஷா நெல்லை மாவட்டம் மற்றும் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல்

பெண் போலீஸ் உஷா விபத்தில் பலியான சம்பவம் குமரி மாவட்ட போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அறிந்ததும், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், உஷாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


'ஹெல்மெட்' அணிந்தும் உயிரிழந்த பரிதாபம்

குமரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் 'ஹெல்மெட்' கட்டாயம் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தில் ெ்சல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெண்போலீஸ் உஷா ஸ்கூட்டரில் பணிக்கு செல்லும் போது, 'ஹெல்மெட்' அணிந்து செல்வது வழக்கம். அதே போல் அவர் நேற்று முன்தினமும் இரவு பணி முடிந்ததும் ஸ்கூட்டரில் 'ஹெல்மெட்' அணிந்தபடிதான் சென்றுள்ளார். அப்படியிருந்தும் அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்