குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி கர்ப்பிணி சாவு
நச்சலூர் அருகே குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கியது
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சொட்டல் கீழ நந்தவன காடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி சத்யா (வயது 21). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சத்யா 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார்.ஓட்டு வீட்டில் இருந்த சத்யா வீட்டை பூட்டி விட்டு உள்ளே இருந்துள்ளார். இதையடுத்து வீட்டின் உள்ளே இருந்த குளிர்சாதன பெட்டியை சத்யா திறந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
கர்ப்பிணி சாவு
இதனால் சத்யா அலறி துடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து வீட்டின் மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பார்த்தனர்.அப்போது மின்சாரம் தாக்கிய நிலையில் உடல் முழுவதும் கருகிய நிலையில் சத்யா இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோட்டாட்சியர் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி, குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தசம்பவம் குறித்து சத்யாவின் தாய் வள்ளி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சத்யாவிற்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் குளித்தலை கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.