பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு

நாகை அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தார். இதனால் ஊழியர்களுடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-07 17:37 GMT

வெளிப்பாளையம்;

நாகை அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தார். இதனால் ஊழியர்களுடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரசவத்திற்கு அனுமதி

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு தெற்கு சல்லிகுளம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி(வயது 28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் 2-வது பிரசவத்துக்காக நேற்று முன்தினம் இரவு கலைவாணியை நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தனபால் சேர்த்தார். நேற்று காலை கலைவாணிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கலைவாணிக்கு, அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

பரிதாப சாவு

இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், டாக்டரின் தவறான சிகிச்சையால் தான் கலைவாணி இறந்ததாக கூறி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவக்குழு

இதன்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், மருத்துவ கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலைவாணி சாவுக்கான காரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதைத்தொடர்ந்து கலைவாணியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்